பாகிஸ்தான், வங்கதேசம் கேப்டன்கள் அதிருப்தி : இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை மாற்றப்பட்டதா?

துபாய்,: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் லீக் சுற்றுக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான், வங்கதேச அணி கேப்டன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றை தொடர்ந்து, சூப்பர் 4 லீக் சுற்று இன்று தொடங்குகிறது. முதலில் சூப்பர் 4 லீக் சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் 2ம் இடம் பெறும் அணியும் மோதுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஏ1 அணியாக இந்தியா உறுதியானதுமே நேற்று முன்தினம் இரவே சூப்பர் 4 லீக் சுற்று அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு விட்டது.

நேற்று நடந்த ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் இடையேயான போட்டி கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்பட வில்லை. அவ்விரு அணிகளும் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட நிலையில், பி1 அணியாக ஆப்கானிஸ்தானும், பி2 அணியாக வங்கதேசமும் கணக்கில் கொள்ளப்பட்டு அட்டவணை வெளியாகி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இந்த அட்டவணையால் பெரிதும் பாதிக்கப்படுவது வங்கதேசமும் பாகிஸ்தானும்தான். அபுதாபியில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் மோதிய வங்கதேசம், சூப்பர் லீக் சுற்றில் இந்தியாவுடன் விளையாட இன்று துபாய் செல்ல வேண்டியிருக்கிறது. பின்னர் அடுத்த போட்டிக்காக அபுதாபி செல்ல வேண்டியிருக்கிறது. இதே போல பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாளில் துபாய்க்கும், அபுதாபிக்கும் மாறி மாறி வந்து விளையாட வேண்டியிருக்கிறது.

இந்திய அணியை பொறுத்த வரையில் இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும், அனைத்து போட்டியையும் துபாயில் மட்டுமே விளையாட உள்ளது. இதனால் வங்கதேச அணி கேப்டன் மோர்டசாவும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஷ் அகமதுவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மோர்டசா கூறுகையில், ‘‘லீக் சுற்று முடியும் முன்பாகவே எதற்காக அடுத்த கட்ட சுற்றுக்கான அட்டவணை வெளியிட்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கையை வென்றதும் நாங்கள், வழக்கமான அட்டவணை பிரகாரம் ஒரு திட்டத்தை வகுத்திருந்தோம். ஆனால் திடீரென அதற்கு நேர்மாறாக சூப்பர் 4 லீக் சுற்று வெளியிடப்பட்டிருப்பது அதிருப்தி தருகிறது’’ என்றார்.

சர்பிராஷ் கூறுகையில், ‘‘90 நிமிட பயணம் என்றாலும் போட்டி நடக்கும் நாளிலேயே பயணம் மேற்கொள்வது எந்த வீரருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.  அட்டவணை என்பது எந்த அணிக்கும் சாதகமாக இருக்கக்கூடாது. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி. வழக்கத்துக்கு மாறான இந்த அட்டவணை அதிருப்தி அளிக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: