ஆசிய கோப்பை சூப்பர் 4 லீக் சுற்று தொடக்கம் : இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 லீக் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில், இந்திய அணி வங்கதேசத்தையும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானையும் சந்திக்கின்றன.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று முடிவடைந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சூப்பர் 4 லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத உள்ளது. இந்நிலையில், சூப்பர் 4 லீக் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா, வங்கதேசத்துடனும், அபுதாபியில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும் மோதுகிறது. இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடிய போதிலும், முதல் போட்டியில் ஹாங்காங்குடன் தடுமாற்றம் கண்டதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது. இதோடு, ஹர்திக் பாண்டியா தீவிர இடுப்பு வலி காரணமாக இத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல, அக்சர் படேல், சர்துல் தாகூரும் காயம் காரணமாக வெளியேறி உள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மிதவேகப்பந்து வீச்சாளர் சாஹர் மற்றும் ஜடேஜா இருவருமே ஆல் ரவுண்டர்கள் என்பதால் இவர்களில் ஒருவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படும் போதிலும், மிடில் ஆர்டரில் இந்திய அணி பலவீனமாகவே உள்ளது. குறிப்பாக டோனியின் செயல்திறன் கேள்விக்குறியாக இருப்பது கவலை அளிக்கிறது. எனவே டோனி முன்கூட்டி களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

வங்கதேசத்தை பொறுத்த வரையில் இலங்கையை வீழ்த்தி முழு தெம்புடன் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை எந்த வகையிலும் லேசாக எடை போட்டுவிட முடியாது. எனவே, நல்ல பார்மில் உள்ள வங்கதேசத்துடன் இந்திய அணி கவனமாக விளையாடினால் மட்டுமே அதிர்ச்சியை தவிர்க்க முடியும். மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் சந்திக்கிறது. ஆப்கானிஸ்தானின் முழு பலமே சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானிடம் உள்ளது. அந்த அணியும் அதிர்ச்சி வைத்தியத்திற்கு கைதேர்ந்ததாக மாறி வருகிறது. எனவே, ஏற்கனவே இந்தியாவிடம் அடி வாங்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), தவான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அகமது, குல்தீப் யாதவ், சாஹல், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல்.

வங்கதேசம்: மோர்டசா (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முகமது மிதுன், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், அரிபுல் ஹக், மகமுதுல்லா, மொசாடக் ஹூசேன் சைகட், நஸ்முல் சன்டோ, மெஹ்தி ஹசன் மிராஸ், நஸ்முல் இஸ்லாம் அபு, ருபெல் ஹூசேன், முஷ்டாபிகுர் ரஹ்மான், அபு ஹைதர் ரோனி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: