மக்களவை தேர்தல் சீட் பேரம் ஆரம்பம் : பீகாரில் 17 தொகுதி கேட்கிறார் முதல்வர் நிதிஷ் குமார்

புதுடெல்லி:  மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தே.ஜ கூட்டணியில் சீட் பேரம் பேச்சுவார்த்தை இப்போதே தொடங்கிவிட்டது. பீகாரில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ 21 இடங்களில் வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 38 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது. தற்போது 20 இடங்களை வைத்துக்கொள்ள முடிவு செய்த பாஜ, 12 இடங்களை ஐக்கிய ஜனதா தளத்துக்கும், 6 இடங்களை லோக் ஜனசக்தி கட்சிக்கும், 2 இடங்களை ஆர்.எல்எஸ்.பி கட்சிக்கும் வழங்க முடிவு செய்திருந்தது. ஆனால் 12 சீட்கள், நியாயமான ஒதுக்கீடு அல்ல, தங்களுக்கு கவுரமான முறையில் சீட் ஒதுக்க வேண்டும். அதாவது 17 இடங்களுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் கூறி வருகிறார்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பிரசாந் கிஷோர், அமித்ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். ஐக்கிய ஜனதா தளம் தனது கோரிக்கையில் உறுதியாக உள்ளது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவர். இதனால், அமித்ஷா, நேற்று அருண்ஜெட்லியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார். நிதிஷ் குமாரை சந்தித்தபின், லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான், ஆர்எல்எஸ்பி கட்சியின் உபேந்திர குஷாவா ஆகியோரை சந்தித்து இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என பா.ஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த இடம் கிடைத்தால் ஆர்எல்எஸ்பி கட்சி, தே.ஜ கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கும் எனத் தெரிகிறது.  உபேந்திர குஷாவா கடந்த மாதம் அளித்த பேட்டியில், ‘‘யாதவர்களின் பாலும், குஷாவர்களின் அரிசியும் சேர்ந்தால், பாயசம் உருவாக்க முடியும்’’ என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: