ஜப்பான் பிரதமராக 2021 வரை நீடிப்பார் ...சுதந்திர கட்சி தலைவராக 3-ம் முறையாக அபே தேர்வு

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஜின்ஷோ அபே, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவராக 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜப்பானில் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் தலைவராக உள்ள ஜின்ஷோ அபே, கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராக இருந்து வருகிறார். நேற்று இக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதமர் அபேயும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷிகரு இஷிபாவும் போட்டியிட்டனர். இதில், பெருவாரியான வாக்குகளை பெற்று அபே வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 807 வாக்குகளில் 553 வாக்குகள் அபேவுக்கு கிடைத்தது. இதன்மூலம், 70 சதவீத வாக்குகள் பெற்ற அபே, கட்சியின் தலைவராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அபேவுக்கு, சுதந்திர ஜனநாய கட்சியின் 80 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுகள் கிடைத்துள்ளன. கட்சி தலைவராக தேர்வு பெற்றதன் மூலம், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3 ஆண்டுகளுக்கு அபே பிரதமராக தொடரும் நிலை உருவாகியுள்ளது. அவரது பதவி நீடிப்பு நாட்டின் ஸ்திரத்தன்மை நீடிக்க உதவும் என நம்பப்படுகிறது. கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேசிய ஜின்ஷோ அபே, ‘‘இது, அரசியலமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நேரம். என்னுடன் இணைந்து புதிய ஜப்பானை உருவாக்க முன்வாருங்கள்’’ என மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: