அமைதி பேச்சுவார்த்தை .... கொரிய நாட்டு அதிபர்கள் எரிமலை உச்சியில் சந்திப்பு

பியாங்யாங்: வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரியா அதிபர் மூன் ஜே இன், அங்குள்ள எரிமலை உச்சியில் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசினார்.உலகையே மிரட்டும் வகையில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்த வடகொரியா, தற்போது பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைத்து நடவடிக்கைகளையும் குறைத்துள்ளது.  இதன் மூலம், தன் நாட்டின் மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையை நீக்க வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முயற்சி மேற்ெகாண்டு வருகிறார். இதற்கான அமைதி பேச்சுவார்த்தையை தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில்தான், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

தற்போது தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் 3 நாள் சுற்றுப் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். இந்த சந்திப்பில், வடகொரியா அணு ஆயுத சோதனை மையத்தை நிரந்தரமாக மூடுவது, ஏவுகணை சோதனை மையத்தை மூடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச பார்வையாளர்கள் ஆய்வு செய்யலாம் என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று வடகொரியாவின் புனிதம் மிக்க எரிமலையாக கருதப்படும் பாக்டு எரிமலைக்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் சென்றனர். அவர்களுடன் இருவரின் மனைவியும் சென்றனர். அங்கு இருநாட்டு அதிபர்களும் கைகளை கோர்த்துக் கொண்டு விரலை உயர்த்தி காண்பித்தனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஏரிக்கரைக்கும் சென்றனர். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் நேற்று மாலை தனது நாட்டிற்கு சென்றார்.

தென்கொரியாவில் எதிர்ப்பு

வடகொரியா, தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு தென்கொரியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய சியோல் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பயன் அடையும் வகையில் ஒப்பந்தம் அமைந்துள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: