மோடிக்கு இம்ரான் கடிதம் .... அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்

இஸ்லாமாபாத்:  ‘பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் மீது கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய  வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் அதிருப்தி அடைந்த இந்தியா, பாகிஸ்தானுடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முற்றிலுமாக நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் காஷ்மீர் மாநிலம், யூரி உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மேலும், 2016ம் ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் மாநாட்டையும் இந்தியா புறக்கணித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் சமீபத்தில் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 14ம் தேதியிட்ட இந்த கடிதத்தில், ‘பாகிஸ்தான்-இந்தியா உறவுக்கு சவாலாக இருக்கும் தீவிரவாதம், காஷ்மீர் பிரச்னை போன்வற்றுக்கு தீர்வு காண்பதற்கு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். நியூயார்க்கில் இந்த மாதத்தில் ஐநா பொதுச்சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் இடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மேமூத் குரேஷியும், இந்திய வெளியுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்’ என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: