திமுக தொடங்கிய காலம் முதல் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருவதை அறியாமல் பேசுவதா? தமிழிசைக்கு திமுக கண்டனம்

சென்னை: ஈழத்தமிழர்களுக்காக  திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் குரல் கொடுத்து வருகிறது. இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று அறியாமல் தன்னை ஒரு தலைவராக கருதிக் கொண்டு அரசியல் பேசி வருகிறார். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும் அதற்கு திமுக துணை போனதாகவும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. நீங்கள் பிறப்பதற்கு முன்பே கருணாநிதி ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.  தி.மு.க துவக்கப்பட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தீர்மானத்தை முன்மொழிந்தவர்.

தங்களின் தகப்பனார் குமரிஅனந்தனை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி நடத்திய போராட்டங்கள், எழுதிய கடிதங்கள், அறிக்கைகள் எண்ணிலடங்காது.  1983-84ல் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் கருணாநிதியும், பேராசிரியரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர் என்பதாவது தமிழிசை அறிவாரா? ஈழத் தமிழருக்காக எம்.ஜி.ஆர் அரசைக் கண்டித்து பல போராட்டங்கள் செய்து கைதானது கருணாநிதியும் திமுகவினரும்தான்.  1991ம் ஆண்டில் திமுக ஆட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. போராளிகளை தமிழகத்தில் ஊடுருவ செய்துவிட்டது. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என ஜெயலலிதா பேசியது தமிழிசைக்கு தெரியுமா?

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்கு பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், எஞ்சியிருக்கும் தமிழர்கள் நலனுக்காக சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி கருத்தரங்கும், டெசோ மாநாடும் நடத்தி தீர்மானங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. அன்றைய காலக்கட்டத்தில் ஈழம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்த தடை உத்தரவு போடப்பட்டது. சென்னையில் 12-8-2012ல் நடைபெற்ற டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பும் போர்க்குற்றங்களும் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசு இதனை செய்ய வேண்டும் ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை ஐ.நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். இலங்கை தமிழ் மக்கள் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் முழு உரிமை வழங்க இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

உலககெங்கும் உள்ள இலங்கை தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைதானார். மத்திய அரசில் இருந்தபோதும் அங்கம் வகிக்காத போதும் ஈழத்தமிழர் நலனுக்காக திமுக போராட தயங்கிய தில்லை. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது கருணாநிதி தனது குடும்பத்தினருக்குகூட சொல்லாமல் அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் போர் நிறுத்தப்பட்டது, இனி அத்தகைய நிலை தொடராது என்று உறுதி அளித்த பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

1991ல் ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் இயக்கம் பயங்கரவாத இயக்கம், அது மனித நேயத்திற்கு எதிரானது, அதற்கு துணைபோகும் திமுகவும் அழிக்கப்பட வேண்டும் என அறிக்கை அளித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொடூரவாதி பிரபாகரனை கைது செய்து, தூக்கிலிட வேண்டும் என்று பலமுறை சட்டமன்றத்தில் பேசியுள்ளதோடு, தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார். டெசோ மாநாட்டு தீர்மானங்களை காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி நீதி விசாரனை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது திமுக. மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் ஐ.நா.மன்றத்திலும் ஜெனிவா மனித உரிமை ஆணைய துணை ஆணையர் நவநீதம் பிள்ளையிடமும் வழங்கினர். பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.   

முள்ளி வாய்க்கால் தடயங்களைப் போலவே எங்களின் மனதில் ஆறாத கவலைகள் உண்டென்றால் அது ஈழத்தமிழர்கள் குறித்த கவலைதான். இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும்.

வரலாறு தெரியாமல் புதிய வரலாற்றை மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க உள்ளது ஆளும் அரசு. எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையானது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: