பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: ‘பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ் இ முகமது,  லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது’ என்று அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தீவிரவாதம் தொடர்பான 2017க்கான ஆண்டறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகம் நேற்று தாக்கல் செய்தது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது;  பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளால் இந்திய துணை கண்டத்திற்கு ஆபத்து தொடர்கிறது. இந்த அமைப்புகள் மீது பாகிஸ்தான் 2017ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆப்கான், பாகிஸ்தானில் இயங்கும் அல் கொய்தா அமைப்பால் உலக தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதை ஒழிக்க போதுமான எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.பாகிஸ்தான் தேசிய நடவடிக்கை திட்டத்தில் ஆயுதம் ஏந்திய எந்த அமைப்பும் பாகிஸ்தானில் இயங்க அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் பல்வேறு தீவிரவாத குழுக்கள், அந்த நாட்டிற்கு வெளியே உள்ள இலக்கை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். ஆப்கனிலும் தாலிபான்கள் இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அதேபோல், ஹக்கானி குழுக்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனால், அமெரிக்காவுக்கும், ஆப்கான் படைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்புகள் மீதும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அந்த குழுக்கள் தொடர்ந்து அங்கு இயங்கி வருகின்றன. அங்கு எளிதாக ஆயுத பயிற்சி அளிக்கிறார்கள். அமைப்பு ரீதியாக செயல்படுகிறார்கள். எளிதாக நிதி உதவி அங்கு கிடைக்கிறது. லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் தற்போது ஜமாத் உத் தவா என்ற அமைப்பை பாகிஸ்தானில் நடத்தி வருகிறார். அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் 2017 நவம்பர் முதல் அவர் வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். இதுபோன்ற அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜநா தடையை அமல்படுத்த வேண்டும். ஏனெனில், இவர்களுக்கு பாகிஸ்தானில் எளிதாக நிதி கிடைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: