பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம்: அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தக்குதல் நடத்தி வருகிறது. இது, இருநாடுகள் இடையேயான இடைவெளியை அதிகப்படுத்தியது. கடந்த 2015ம் ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்காததால், இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான்கான் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அமெரிக்காவில் இம்மாதம் நடைபெற உள்ள ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் அமைச்சர் மஹ்மூத் குரேஷியும் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. தீவிரவாதம், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுமட்டுமின்றி இருநாடுகள் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களும் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது போன்றவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், இருநாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட அமைதிப்பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: