நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை விலை நிர்ணயம் : பண்ணையாளர்கள் கடும் எதிர்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டைக்கு தினசரி விலை நிர்ணய முறை, திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 900த்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. சுமார் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்இசிசி) வாரந்தோறும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விலை நிர்ணயிக்கிறது. இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை விலையில் 5 காசு குறைத்தது. அடுத்த நாள் (திங்கட்கிழமை) மேலும் 10 காசு குறைத்தது. நேற்று திடீரென மேலும் 5 காசு குறைத்துள்ளது. என்இசிசியின் இந்த தினசரி விலை நிர்ணயத்துக்கு, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் சின்ராஜ் கூறுகையில், ‘நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டைக்கு தினமும் விலை நிர்ணயம் செய்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதனால் முட்டைக்கு விலை குறையும் போது பண்ணையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.  வாரம் 3 முறை மட்டுமே விலை நிர்ணயிக்க வேண்டும்,’ என்றார்.

இந்த பிரச்னை தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ், அனைத்து பண்ணையாளர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மைனஸ் 60 முதல் 70 காசுகள் வரை அதிகரித்ததால், பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் பொருட்டே, நாமக்கல் என்இசிசி பல்வேறு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் இனி வரும் காலங்களில் முட்டை வியாபாரம் சுமூகமாக நடைபெறும். எந்த மாற்றத்திற்கும் ஆரம்ப காலத்தில் சிறு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். பண்ணையாளர்கள் முட்டை விலையை 25 காசு மைனஸ் என்ற நிலையில் நிறுத்தினால் மட்டுமே, முட்டை விலையை அதிகரிக்கவும், சுமூகமாக வியாபாரம் நடத்தவும் முடியும். எனவே பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: