முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமிய மதத்தில் மூன்று முறை தலாக் என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இது சட்ட விரோதமானது என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், இதற்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்றும்படியும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.இதனைதொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி மக்களவையில் முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் மசோதாவை அரசு தாக்கல் செய்தது. எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அவசர கதியில் மசோதா இயற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இருந்த போதிலும் பாஜ.வுக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதே நேரம், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறவில்லை. எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்று மசோதாவில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. எனினும் பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மசோதா நிறைவேறும் வரையில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.   பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ்  ஒத்துழைப்பு தரவில்லை. வாக்கு வங்கி அரசியல் காரணமாக மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது ரத்த சொந்தம் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். கணவன், மனைவி இருவரும் சமரசம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஒரு பெண் வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியே இந்த மசோதாவிற்கு ஆதரவு தரவில்லை. மீண்டும் சோனியாஜியிடம் வலியுறுத்துகிறேன்.  நாட்டின் அக்கறையில் ஆர்வம் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. உங்கள் வாக்கு வங்கியை உயர்த்தி பெண்களுக்கு நீதி வழங்கும் மசோதா நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; அமித்ஷா பாராட்டு

முத்தலாக்கை தண்டனை பெறும் குற்றமாக கருதும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என பாஜ தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது ெதாடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில்,” அரசின் இந்த முடிவானது முஸ்லீம் பெண்கள் சமூதாயத்தில் கண்ணியமாக வாழ வகை செய்கின்றது. தங்கள் வாக்கு வங்கி அரசியல் மூலமாக முஸ்லீம் பெண்கள் முத்தலாக்கால் பாதிக்கப்படுவதற்கு கட்டாயப்படுத்திய அரசியல் கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டிய விஷயமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

மூன்று முக்கிய திருத்தங்கள்

முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் செய்யும்படி மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு, அவசர சட்டத்தில் 3 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம். முத்தலாக் விவகாரத்தில் கணவன்,  மனைவி அல்லது குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும். முத்தலாக் மூலம் விவாகரத்து  வழங்கிய பிறகு சம்பந்தப்பட்ட கணவன் - மனைவி இடையே சமரசம் ஏற்படும் பட்சத்தில்,  அவர்கள் அபராதம் செலுத்தி மீண்டும் ஒன்று சேர்ந்து வாழலாம். இந்த 3 திருத்தங்கள் சேர்க்கப்பட்டதால், இந்த அவசர சட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்கள் உதவித்தொகை பெறுவதை மோடி விரும்பவில்லை; காங். குற்றச்சாட்டு:

முத்தலாக்கை குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “முத்தலாக் பிரச்னையில் மோடி அரசு முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை காட்டிலும் “அரசியல் கால்பந்து” போன்று நடத்துகிறது. உடனடி முத்தலாக் என்பது சட்ட விரோதமானது, அரசியலமைப்புக்கு விரோதமானது மற்றும் மனிதத்தன்மையற்ற நடைமுறையாகும். இதனை உச்ச நீதிமன்றம் தகர்த்துள்ளது. உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின்னர் அது சட்டமாக மாறிவிட்டது. முத்தலாக் தடுக்கப்பட்ட பின்னர் அடுத்த பிரச்னை முஸ்லீம் பெண்களுக்கு நீதி வழங்குவதாகும். தங்களையும், தங்களது குழந்தைகளையும் பாராமரித்துக்கொள்வதற்காக கணவரின் சொத்தில் இருந்து உதவித்தொகை பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

உதவித்தொகை வழங்க முடியாதுஎன்பவரின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் இணைக்கப்பட வேண்டும். ஆனால் மோடி அரசு இதனை ஏற்கவில்லை. முஸ்லீம் பெண்களுக்கு நீதி வழங்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. முஸ்லீம் பெண்கள் உதவித்தொகை பெறுவதையும் மோடி அரசு விரும்பவில்லை. அதனால் தான் சொத்து விவரத்தை இணைக்க வேண்டும் என்ற திருத்தத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஒருவரை சிறையில் அடைத்தபின்னர், எப்படி பாதிக்கப்பட்ட பெண் உதவித்தொகை பெறுவார், தன்னையும் தனது குழந்தையையும் பராமரித்துக்கொள்வார். எனவே தான் இதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவிக்கின்றது.” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: