மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட நிர்வாகிகள் விருப்பம் : கோவையில் கமல் தகவல்

கோவை: நாங்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். அதனால்,  தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்’ என்று கமல் தெரிவித்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில அளவிலான ெபாறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் கோவை நட்சத்திர ஓட்டலில்  நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இரண்டாவது நாள் பயிலரங்கம் நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேசியதாவது:

வரும் 2ம் தேதி காந்திஜெயந்தி அன்று  கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. இதில், வரவு-செலவு கணக்கை  மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தொண்டர்கள் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, கொசு மருந்து அடித்ததாக லட்சக்கணக்கில் செலவு கணக்கு எழுதியிருப்பார்கள். ஆனால், கொசு மருந்தே அடித்திருக்க மாட்டார்கள். இதுமாதிரியான முறைகேடுகளை கண்டறிந்து, வீதி வீதியாக சென்று, மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த முறைகேடு குறித்து போலீஸ், நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். தனித்து போட்டி: இதன்பின்னர், நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

கோவை பயிலரங்கில் பலதுறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து விவாதித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிரசார ஆலோசகர் விரைவில் பயிற்சி அளிக்க உள்ளார். இதுபோன்ற பயிற்சி முகாம் தொடர்ந்து நடத்தப்படும். பாஜகவினர் தங்களது கருத்துக்கு யாரும் எதிர்கருத்து தெரிவிக்க கூடாது என நினைக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் இது ஒத்துவராத விஷயம். திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.  இதைவிட பெரிய தேர்தல் களம் வருவதால் அதற்கு தயாராகி வருகிறோம். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். அதனால், உள்ளாட்சி தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கிறோம். தேர்தலில் தனித்து போட்டியிலாம் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் விமர்ச்சிக்கக்கூடாது. அ.தி.மு.க.வினர் `சப்பானி’ என எனது படத்தின் கேரக்டரை சொல்லி என்னை விமர்சிக்கிறார்கள். பாவம், அதற்கு நான் ஏதாவது பதில் சொன்னால் வருத்தப்படுவார்கள்.  இவ்வாறு கமலஹாசன் கூறினார். 4 இடத்தில் தலைமை அலுவலகம்: முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பயிலரங்கில், ``கட்சியின் தலைமை அலுவலகங்களை சென்னையை தொடர்ந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மேலும் 3 இடங்களில் அமைக்கப்படும்’’ உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: