18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வரும் : ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: 18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு இருக்கும் எனவே இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு கவிழும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோற்றுவிட்டது. எடப்பாடி அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறையிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடப்போவதாக கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பாமக மிகப்பெரிய போராட்டம் நடத்தும். உயர்கல்வி துறையில் 4247 பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. 18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் கூறும் தீர்ப்பு, எடப்பாடி அரசுக்கு எதிராக இருக்கும். இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு கவிழும். தீர்ப்பு வந்தவுடன் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அரசின் மீது தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நெல் கொள்முதல் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் அரசு நிர்ணயத்துள்ள விலையை விட கூடுதலாக, உயர்த்தி ₹2500 வழங்கவேண்டும்.

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி 11 நாள் ஆகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை. அக்டோபர் 2ம்தேதி காந்தி பிறந்த நாள் அன்று 7 பேரை விடுதலை செய்யவேண்டும்.மணல் கொள்ளைக்கு துணை போவதாக விழுப்புரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: