ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து அதிமுகவினர் தந்த டார்ச்சரை தாங்காமல் செல்போனை உடைத்தெறிந்த தாசில்தார்

திட்டக்குடி:  திட்டக்குடி திருக்குளம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை ஆளும் கட்சியினர் நிறுத்த உத்தரவிட்டதால் ஆவேசமடைந்த தாசில்தார் தனது போன்களை கீழே போட்டு உடைத்து ஆவேசத்துடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி  திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தாசில்தார் சத்தியன் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆளும் கட்சியில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டது. இதனையும் மீறி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகள், வணிக வளாகங்களை இடித்து வருகின்றனர். தற்போது, பாதியளவு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்புதாரர்கள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறது என்று மிரட்டியுள்ளனர். இந்நிலையில் தாசில்தாருக்கு தொடர்ந்து அவரது செல்போனில் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்று எம்பி, எம்எல்ஏக்களிடமிருந்து உத்தரவு வந்தது. இதனால் ஒரு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆக்கிரமிப்பு தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

 

பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்க முயற்பட்ட போது, மீண்டும் மற்றொரு செல்போனில் இருந்தும், மேலிடத்தில் இருந்து பணியை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு வந்தது. தொடர் வாய்மொழி உத்தரவால் கடுப்பாகி போன தாசில்தார் தனது செல்போன்களை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு ஆவேசமாக சென்றார்.இதுகுறித்து வருவாய் துறை தரப்பில் கேட்டபோது, ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள இரண்டாவது முறையாக அனுமதி கேட்டுள்ளனர். இதனை ஏற்று இரு நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உறுதியுடன் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: