ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் ஷர்துல், கலீல் நீக்கப்பட்டு பூம்ரா, ஹர்திக் சேர்க்கப்பட்டனர். இமாம் உல் ஹக், பகார் ஸமான் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இமாம் 2 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார். பகார் ஸமான் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வர் பந்துவீச்சில் சாஹல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.இந்த நிலையில், பாபர் ஆஸம்  சோயிப் மாலிக் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். பாபர் 47 ரன் (62 பந்து, 6 பவுண்டரி) எடுத்து குல்தீப் சுழலில் கிளீன் போல்டானார்.

ஹர்திக் காயம்: ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது 5வது ஓவரை வீசியபோது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரால் நிற்க முடியாததால் ஸ்ட்ரெச்சரில் வைத்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு அந்த ஓவரின் கடைசி பந்தை வீசி நிறைவு செய்தார்.

கேப்டன் சர்பராஸ் அகமது 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, சோயிப் மாலிக் 43 ரன் எடுத்த நிலையில் (67 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆசிப் அலி 9, ஷதாப் கான் 8 ரன் எடுத்து கேதார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த பாகீம் அஷ்ரப் 21 ரன் எடுத்து (44 பந்து, 2 பவுண்டரி) பூம்ரா வேகத்தில் தவான் வசம் பிடிபட்டார். ஹசன் அலி 1 ரன், உஸ்மான் கான் டக் அவுட்டாகி வெளியேற... பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 162 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. முகமது ஆமிர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கேதார் ஜாதவ் தலா 3, பூம்ரா 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்தியா 50 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். நிதான ஆட்டம் ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தனர். ரோகித் சர்மா 52 ரன்னிலும், தவான் 46 ரன்னிலும் அவுட்டாயினர. 29 ஓவரில் இந்திய அணி 164 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: