பேரவையில் எஸ்ஐயை தாக்கியதாக வழக்கு : தேமுதிக மாஜி எம்எல்ஏவை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கடந்த 2015 பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேரவைத் தலைவர்  இருக்கையை முற்றுகையிட்டதாக சூலூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தினகரன், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. சேகர் ஆகியோரை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.  அதன்படி, பேரவைக்குள் இருந்து வெளியேற்றிய பின்னர் லாபியில் அமர்ந்து கோஷம் எழுப்பிய அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியபோது, தன்னை தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் சென்னை கோட்டை  போலீசில் புகார் அளித்தார். அதன்படி, தொடரப்பட்ட வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தினகரன் தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்த சீராய்வு மனு, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, எம்எல்ஏவான தன் மீது வழக்கு பதிய உரிய அனுமதி பெறவில்லை என தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.  அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், சட்டப்பேரவை செயலாளரின் அனுமதி பெற்றுத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அதற்கான கடிதத்தை தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ.வை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து, விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: