சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு ஆட்சேபனை தெரிவிக்க வந்த விவசாயி உட்பட 4 பேர் கைது

செய்யாறு: சென்னை- சேலம் 8 வழி சாலைக்கு ஆட்சேபனை தெரிவிக்க வந்த விவசாயி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை- சேலம் இடையே பசுமை சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் தேத்துறை முதல் மேல் நெமிலி வரை 14 கிராமங்களில் நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு தாலுகாவில் 74 விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் வே.வெற்றிவேல் தலைமையில் நேற்று நடந்தது. 200க்கும் மேற்பட்ட போலீசார் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து அதிகாரி வெற்றிவேல் கூறுகையில், விவசாயிகள் சொந்த விருப்பப்படி ஆட்சேபனை தெரிவித்தனர். அப்போது கூடுதல் தொகையை கேட்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டனர். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 838 நில உரிமையாளர்களில் 639 பேர் நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் என்றார். முன்னதாக விசாரணைக்காக வந்த  எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த தேவன், விவசாயிகளுக்கு ஆதரவாக வந்த  அத்தியபாடி அருள், முத்துக்குமார், முறையாறு சிவா ஆகிய 4 பேரையும் போலீசார்  கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது, 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்க செய்தி தொடர்பாளர் அருள் கூறுகையில், ‘விவசாயிகளை பயமுறுத்தும் நோக்கில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 2 வார காலம் நீதிமன்றம் தடை விதித்த போதும், இவர்கள் விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: