சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,877 வாகனங்கள் 27ம் தேதி ‘இ-ஏலம்’: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு அகற்றப்பட்ட 7,877 வாகனங்கள் வரும் 27ம்தேதி மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனங்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு, வடக்கு வட்டார அலுவலகத்தின் கீழ்  வரும் 1 முதல் 5 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட 2,627 இரு மற்றும் மூன்று, நான்கு சக்கர பழுதடைந்த வாகனங்கள் ராயபுரம் மண்டலம், சூளை அவதான பாப்பையா தெருவில் மலேரியா ஸ்டோர் அருகில் அமைந்துள்ள  மாநகராட்சி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 மத்திய வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 6 முதல் 10 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட 2,926 இரண்டு, மூன்று, நான்கு சக்கர பழுதடைந்த வாகனங்கள் அண்ணாநகர் மண்டலம் மேயர் சத்தியமூர்த்தி சாலை, மத்திய தார்  கலவை நிலைய வளாகத்திலும், தெற்கு வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 11 முதல் 15 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட 2,324 பழுதடைந்த வாகனங்கள் பள்ளிக்கரணை பழைய குப்பை கொட்டும் வளாகத்திலும் என ஆக  மொத்தம் 7,877 வாகனங்கள் அகற்றப்பட்டு மேற்கண்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்பட்ட வாகனங்கள் எந்த வழக்குகளுடனும் சம்பந்தப்படவில்லை அல்லது எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் நிலுவையில் இல்லை எனவும் காவல்துறையின் மூலம் சான்று அளிக்கப்பட்டுள்ளது. உரிமை  கோரும் வாகனத்தின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் இ-ஏலம் விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, வாகன உரிமை கோராத அனைத்து  வாகனங்களையும் மதிப்பீடு செய்து வட்டார வாரியாக மூன்று தொகுப்பாக மின்னணு ஏலம் நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் மூன்று வட்டார அலுவலக வாகனங்களையும் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனமான எம்எஸ்டிசி நிறுவனம் மூலம் மின்னணு  ஏலம் வரும் 27ம்தேதி நடைபெறுகிறது. ஏலம் குறித்த விபரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சாலையோரங்களில் நீண்ட நாட்கள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டால் உடனடியாக அகற்றப்பட்டு, வாகன  உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கையும் உரிமை கோராத வாகனங்கள் ஏலம் விடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: