கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு : கிராமப்புறங்களில் பணியாற்ற டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் 143 மாணவ, மாணவியருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கி பேசியதாவது: 125 கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில் 1,250 பேருக்கு ஒரு மருத்துவரே உள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 10 பேருக்கு 12 மருத்துவர்கள் உள்ளனர். இது சர்வதேச சராசரி அளவான, 800 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் அளவுக்கு சமமானது. மருத்துவ வசதிகளில் தமிழகம் முன்னேறியுள்ளதை இதன்மூலம் அறிய முடிகிறது. பொது சுகாதாரத்துறை தேசிய சுகாதார சுயவிபர அறிக்கை 2017-ன்படி கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த திறமையான டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் பணியாற்ற டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 சமீபத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஸ்மான் பாரத்-தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள சுகாதார வசதிகளை மருத்துவக் காப்பீட்டின் மூலம் பெறமுடியும்.   ஏற்கனவே இருக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுடன், மாநில அரசின் பொருத்தமான ஒருங்கிணைப்புத் திட்டத்தையும் இது உறுதிப்படுத்துகிறது.  இவ்வாறு புரோகித் தெரிவித்தார்.

விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு கூடுதல் முதன்மைச்செயலாளர் ராஜகோபால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனிவாசன், செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் ஆனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர்கள் ராஜபூபதி, ராஜசேகர், டீன் ரெங்கநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: