×

தேமுதிக பிரமுகரின் கடையை உடைத்து 7.35 லட்சம் செல்போன், பணம் அபேஸ்

சென்னை: தேமுதிக பிரமுகரின் கடையை உடைத்து ₹6 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன்கள், ₹1.35 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை வியாசர்பாடி, எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் அருள் பாக்யராஜ் (40). தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். கொடுங்கையூர், காமராஜர் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்  இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும் பாக்கியராஜ், கடையை பூட்டி கொண்டு வீ்ட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை  கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேசில் அடுக்கி வைத்திருந்த ₹6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், கல்லாவில் வைத்திருந்த ₹1.35 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது  தெரிந்தது.

* குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த பம்மல், ஈஸ்வரன் நகர், 6வது தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய  அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (22) மற்றும் லோகேஷ் (21) ஆகியோரை தேடி வருகின்றனர்.
* சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிந்தாதிரிப்பேட்டை குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த ரவுடி பாபு(எ) குதிரை பாபு(31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 1.700 கிலோ  கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
*  தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே பதுவஞ்சேரி, முத்துமாரியம்மன் நகர், அகரம் தென் பிரதான சாலையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது வீட்டின் கீழ் பகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் நேற்று  அதிகாலை சுமார் 4 மணியளவில் புகுந்த மர்ம ஆசாமிகள் 3 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல், அதே பகுதியில் செல்போன் கார்த்திக் என்பவரின் செல்போன் கடைக்குள்  புகுந்த கொள்ளையர்கள் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் ₹2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச்சென்றனர்.
* திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சித்ரா (35). இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்போன் பேசியபடி நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்மநபர், அவரிடம் இருந்த செல்போனை  பறித்து கொண்டு வேகமாக தப்பினார். அவனை துரத்தி சென்று பிடித்த மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த ராஜி (22)  என்பதும், அவர் ஓட்டி வந்த பைக், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரனிடம் இருந்து திருடியதும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார் ராஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* கொடுங்கையூர் காந்தி நகரை சேர்ந்த ஷர்மிளா (23), நேற்று காலை அவரது நண்பர் மாதவரம் தணிகாசலம் நகரை சேர்ந்த கோபி (21) என்பவருடன் பைக்கில் வேலைக்கு சென்றார். புளியந்தோப்பு ஆட்டு தொட்டி சென்றபோது,  முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்தி செல்ல கோபி முயன்றார். அப்போது லாரியின் பக்கவாட்டில் பைக் உரசியதால் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி, ஷர்மிளா சம்பவ  இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கோபிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் தண்டபாணி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* ஆலந்தூர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம், (45) இவர், நங்கநல்லூர், 4வது பிரதான சாலையில் உள்ள நடை பாதையில் துணி வியாபாரம் செய்கிறார். இவரிடம் மாமூல் கேட்டு கத்திமுனையில் ₹1000  பறித்து சென்ற பழவந்தாங்கல், ரகுபதிநகரைச் சேர்ந்த ராஜசேகர் (22) பிரகாஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த திருப்பூரை சேர்ந்த குமார் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Break,dementi ,dignitaries, cellphone, money transfer
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...