அம்பத்தூர் ஏரியில் 50 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தகவல்

அம்பத்தூர்: அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து வருகின்றனர். முதல் நாளான நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. அம்பத்தூர் ஏரி 380 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன் பருவமழை பொய்த்ததால், அம்பத்தூர் ஏரி தண்ணீரின்றி வறண்டது. இதை சாதகமாக  பயன்படுத்தி சிலர் ஏரியை படிப்படியாக ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டினர். ஏரிக்குள்ளே சாலையும் அமைத்து கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள், கடைகளுக்கு மின் வாரியம் சார்பில் மின் இணைப்பும்  வழங்கப்பட்டது. இந்நிலையில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த சில மாதங்களாக ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள்  குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அம்பத்தூர்  ஏரிக்கு வந்தனர்.

இவர்களுடன் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பொற்கொடி, மோகன், விஜயராகவன், ஜெய்கிருஷ்ணன் மற்றும்  100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர்.  பின்னர், போலீசாருடன் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஏரியில் ஆக்கிரமித்த வீடுகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், வீடுகளை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதல் நாளான நேற்று மட்டும் 50 வீடுகள் இடிக்கப்பட்டன. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள்  தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நங்கநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நங்கநல்லூர் நான்காவது 4வது பிரதான சாலையில் ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், ஹார்டுவேர்ஸ், ஓட்டல்கள், செல்போன் கடைகள், காய்கறிகடைகள் என 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளின்  உரிமையாளர்கள் தங்கள் விளம்பர போர்டுகள், வியாபார பொருட்கள் போன்றவை நடைபாதை மற்றும் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ளதால், அப்பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக  பொதுமக்கள் நெடுஞ்சாலைதுறை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று காலை நங்கநல்லூர் 4வது பிரதான சாலை பகுதியிக்கு சென்று,  அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டிருந்த கடைகள், விளம்பர முகப்பு பேனர்கள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை இடித்து அகற்றினர். இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: