உற்பத்தியே இல்லாத காற்றாலையில் மின்சாரம் வாங்கியதாக கணக்கு காட்டி மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் : ஸ்டாலின் புகார்

சென்னை: உற்பத்தியே இல்லாத காற்றாலையில் மின்சாரம் வாங்கியதாக கணக்கு காட்டி தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாகக் கணக்குக் காட்டி, மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தில் நடைபெற்று வரும் மிகப்பெரிய ஊழல், அதிர்ச்சியடைய வைக்கிறது. மின்வாரியத்தின், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு, காற்றாலை மின்சாரம் குறித்து நடத்திய ஆய்வின்போது இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெறாத மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டதாக, தூத்துக்குடி மேற்பார்வைப் பொறியாளரே 29.11.2016 அன்று கடிதம் அனுப்பி, அதனடிப்படையில் அரசுப் பணம் சூறையாடப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 2016 மற்றும் டிசம்பர் 2016 ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும், ஒரு கோடியே 35 லட்சம் யூனிட்டுகளுக்கு மேற்பட்ட காற்றாலை மின்சாரத்திற்கு இப்படி போலியான-பொய்யான கணக்கு தயார் செய்யப்பட்டு ரூ.9.17 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

காற்றாலை மின்சாரம் சப்ளை செய்யாத அக்கம்பெனிக்கு, இந்த ரூ.9 கோடி ஏன் போனது, அங்கிருந்து வேறு யார் யாருக்கு எல்லாம் அந்த ஊழல் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பது தனியாக விசாரணைக்குரியவை. இது ஏதோ ஒரு தூத்துக்குடி வட்டத்தில் மட்டும் நடைபெற்றுள்ள மோசடி அல்ல, தமிழகம் முழுவதிலும் காற்றாலை மின்சாரத்தில் “போலி கணக்கு” போடப்பட்டு, எப்படி ஊழல் நடக்கிறது என்பதற்கு இது ஒரு “சாம்பிள்” மட்டுமேமின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பகிர்மான டைரக்டராக இருக்கும் “ஜூனியர் மோஸ்ட்” தலைமைப் பொறியாளருக்கும், வாரிய சேர்மனுக்கும் இந்த ஊழல் தெரியவந்தும், இதுவரை ஊழலில் தொடர்புடைய “முதலைகள்” மீது நடவடிக்கை இல்லை.மின்துறையில் என்ன தவறு நடந்தாலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பேட்டியளிக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி, இந்த காற்றாலை மின்சார ஊழல் பற்றி இதுவரை வாய் மூடி இருப்பது ஏன்? ஊழல் செய்வதற்குத் துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தடையாக நிற்பது ஏன்? வராத மின்சாரம் வந்ததாக கணக்குக் காட்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க மேற்பார்வை பொறியாளரே கடிதம் எழுதியது யாருடைய தூண்டுதலால்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. ஆகவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தூத்துக்குடி வட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நடக்கும் “காற்றாலை மின்சார” ஊழல் குறித்து லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும், மாநிலமே மின்வெட்டு அச்சத்திலும் நெருக்கடியிலும்  இருக்கும் போது, இப்படியொரு முறைகேட்டிற்கும், ஊழலுக்கும் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் துணைபோயிருக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி பொறுப்பேற்று பதவி விலகி, போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: