வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய மூன்றையும் ஒரே வங்கியாக இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நோக்கத்தை கெடுத்துவிடும். இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விஜய் மல்லையாவை தப்பிக்கவிட்ட பிரச்னையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. தேனா வங்கியின் வாராக் கடன் அளவு மிக அதிகமாக இருப்பதால் அது ரிசர்வ் வங்கியின்  நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. அதை, சற்று லாபத்தில் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைப்பதால் அந்த வங்கியும்  பின்னடைவுக்கு ஆளாகும்.  மத்தியில் ஆளும் பாஜ அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஒரு பொருளாதாரத் தற்கொலைக்கு சமமாகும். பாஜ அரசு தற்போது பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்ட முற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: