ஸ்டெர்லைட் ஆய்வு குறித்த தமிழக கோரிக்கையை ஏற்க முடியாது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயரதிகாரி தகவல்

பெங்களூரு :  ஸ்டெர்லைட் ஆய்வை நிறுத்துவது தொடர்பான தமிழகத்தின் கோரிக்கையை  ஏற்க முடியாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு  உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த 10ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ‘தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஆய்வு குழுவுக்கு தடை விதிக்க முடியாது’ என உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான சீராய்வு மனு விசாரணை உச்ச  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு வரும் 22ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட உள்ளதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் தமிழக அரசு பெங்களூரு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனருக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் ‘பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு வரும் 22ம் தேதி முதல் பார்வையிட  வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை எதிர்த்தும் தமிழக அரசாணையை எதிர்த்தும் பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால்  ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிடும் நிகழ்வை தள்ளி வைக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக, பெங்களூருவில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனர் ‘தினகரன்’ நிருபரிடம் கூறியதாவது:உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 20 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஆலையைச் சுற்றி பாதிக்கப்படும் இடங்கள்  உள்ளிட்டவற்றை குழுவுடன் இணைந்து பார்வையிடும் பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள குழுத் தலைவர் தருண் அகர்வால் மற்றும் அதிகாரிகள் குழு கடந்த வாரமே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி சென்றிருக்க வேண்டும். ஆனால் தருண் அகர்வாலுக்கு உடல்  நலக்குறைவு ஏற்பட்டதால் ஆய்வுப் பணி மேற்கொள்ள செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவர் பார்வையிடும் தேதியை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து டெல்லியில் உயரதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்தினோம். வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆய்வு நடத்த தேதி முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.  நாங்கள் டெல்லியில் உயரதிகாரிகள் மற்றும் குழுவினரின் ஆலோசனைப்படி நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

இந்நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளரிடம் இருந்து கடிதம் கிடைத்துள்ளது. அதில் பார்வையிடும் நிகழ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் உயர்மட்டக்  குழுவினரின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே உச்ச நீதிமன்றம் தடைவிதித்தாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக மட்டும்தான் தேதியை ஒத்தி வைக்க முடியும். வரும் 22ம் தேதி முதல்  24ம் தேதிவரை திட்டமிட்டபடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: