8 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சொகுசு மாளிகையை வெளிக்காட்டினார் மாயாவதி

லக்னோ: உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி தனது ஆட்சி காலத்தில் வாங்கிய மாளிகையை நேற்று வெளியுலகுக்கு காட்டினார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உ.பி முதல்வராக நான்காவது முறை கடந்த 2007ம் ஆண்டில் பதவி ஏற்றார். அவருக்கு லக்னோவில் மால் அவென்யூ பகுதியில் 13ஏ என்ற பிளாட்டில் அரசு இல்லம்  ஒதுக்கப்பட்டிருந்தது. இங்குதான் உ.பி அமைச்சர்களின் இல்லங்கள் அனைத்தும் உள்ளது. மிகவும் முக்கியமான மையப் பகுதி என்பதால்,  இதே பகுதியில் 9 எண் கொண்ட 71,000 சதுர அடி நிலம் ஒன்றை கடந்த 2010ம் ஆண்டு  மாயாவதி விலைக்கு வாங்கினார். இந்த வீடு அவர் குடியிருந்த அரசு இல்லத்தை விட இரண்டு மடங்கு பெரியது. உ.பி முன்னாள் முதல்வர்கள் எல்லாம் பதவி முடிந்த பின்பும் தாங்கள் முன்பு குடியிருந்த அரசு வீட்டிலேயே குடியிருந்து வந்தனர்.

மாஜி முதல்வர்கள் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குடியிருந்த வீட்டை கன்சிராம் நினைவிடமாக மாற்றிவிட்டதால், அந்த வீட்டிலேயே குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என  உ.பி அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு அனுமதி கிடைக்காததால் அரசு வீட்டை இந்தாண்டு தொடக்கத்தில் காலி செய்து, 9 எண்ணில் வாங்கிய வீட்டுக்கு குடிபெயர்ந்தார். ஆனாலும் அவர் டெல்லியில் உள்ள  வீட்டிலேயே பெரும்பாலான நாட்கள் தங்கியிருந்தார்.

இந்நிலையில் லக்னோவில் உள்ள வீட்டுக்கு நிருபர்களை நேற்று அழைத்துக் காட்டினார் மாயாவதி. தனது தனிப்பட்ட மாளிகையை 8 ஆண்டுகளுக்குப்பின் அவர் வெளியுலகுக்கு காட்டினார். அப்போது அவர் அளித்த பேட்டியில்  கூறியதாவது:

உ.பியில் நான் ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் பா.ஜ ஆட்சி நடந்தது. அப்போது தாஜ் வணிக வளாக வழக்கில் என் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இது எனது ஆதரவாளர்களை மிகவும் புண்படுத்தியது. நாடு  முழுவதும் உள்ள எனது கட்சி தொண்டர்கள் எனக்கு நன்கொடை அனுப்பினர்.

அந்த பணத்தில்தான் பகுஜன் கட்சிக்காக நான் லக்னோ மற்றும் டெல்லியில் சொத்துக்கள் வாங்கினேன். பா.ஜ கொடுத்த தொந்தரவால்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். அதற்காக பா.ஜ.வுக்கு நானும், எனது  ஆதரவாளர்களும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்த உ.பி பா.ஜ தலைவர் மகநே–்திரநாத் பாண்டே, ‘‘கன்ஷிராமை மாயாவதி சரியாக கவனிக்கவில்லை. இது உலகத்துக்கே தெரியும். கன்ஷிராம் குடும்ப உறுப்பினர்கள் மாயாவதியிடம் இன்றும்  பேசுவதில்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: