சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு தொடங்க கடலோர ஆராய்ச்சி மையத்துடன் ஒப்பந்தம்: அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை: சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு தொடங்குவதற்காக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.  சென்னையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். லேசான மழை பெய்தாலே பாதிப்பு அதிக அளவில் உள்ளதை கணக்கில் கொண்டு சென்னை பெருநகர வெள்ள அபாய மேலாண்மை சார்பில்,‘சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை’ அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:  சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே எவ்வளவு மழை பெய்யும், எங்கெங்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிவதற்காக தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்திய தொழில் நுட்ப மையம், மும்பை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலை உணர்வு நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டாக சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு சென்னையில் ஏற்படக்கூடிய வெள்ள அபாய நிலை, மழை அளவு, கடல் அலை வேகம், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் அளவுகள், இன்னும் சில புள்ளி விபரங்களை துல்லியமாக கணிக்கும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிநவீன முன்னறிவிப்பு கருவிகளின் துணை கொண்டு 5 நாட்களுக்கு முன்பாகவே ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் மற்றும் அதன் பாதிப்புகளை கண்டறிந்து ஆபத்துகளை முன் கூட்டியே தடுக்க முடியும்.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குனர் எம்.வி.ரமணமூர்த்தி முன்னிலையில் கையெழுத்தானது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒரு இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http//gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது, வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் உடன் இருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: