சிவகாசி அருகே அவலம் கண்மாயில் மண் கொள்ளை: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள பம்மன்குளம் கண்மாயில் வரைமுறையின்றி செம்மண் அள்ளுவதால் மூன்று ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.சிவகாசி அருகே சாமிநத்தம் ஊராட்சியில் பம்மன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் சாமிநத்தம், ஆனையூர், தேவர்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு போர்வெல், ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மூன்று ஊராட்சிகளிலும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர்  நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த கண்மாயில் மண் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு வழங்கிய அனுமதியை விட கூடுதலாக மண் எடுக்கின்றனர். ஒவ்வொரு பள்ளமும் சுமார் 15 அடி முதல் 20 அடி ஆழம் வரை மண் அள்ளியுள்ளார்.

கரைகள் பகுதியையும் விட்டு வைக்காமல் இஷ்டத்திற்கு மண் எடுத்து செல்கின்றனர். இவ்வாறு மண் அள்ளுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, மூன்று ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு பகலாக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பம்மன் கண்மாயில் மண் அள்ளியுள்ளனர். 3அடி ஆழத்திற்கு அள்ள மட்டுமே அரசு அனுமதி உள்ள நிலையில், 15முதல் 20அடி ஆழத்திற்கு மண்ணை அள்ளியுள்ளனர். விற்பனை செய்யக்கூடாது,

 விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகளை மீறி ஒரு லோடு 5ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். பட்டாசு ஆலைகளுக்கும், வீடுகள் கட்டவும் விதிமுறைகளை மீறி மண் எடுக்கின்றனர். இந்த மண் திருட்டு குறித்து வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும். ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: