×

செம்பனார்கோவில் அருகே கோரத்தாண்டவமாடிய சூறைக்காற்றில் 350 மின்கம்பம் சாய்ந்தது: 4 நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு

செம்பனார்கோவில்: வெப்பச்சலனம் காரணமாக  காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த  16ம் தேதி பல இடங்களில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.  திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டம்  செம்பனார்கோவில் பகுதியில் 16ம் தேதி  இரவு 7.30 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. மழைக்கான மேகங்கள் திரண்டு  இடி, மின்னலுடன் மிரட்டியது. சூறாவளி காற்றும் 30 நிமிடங்களுக்கு மேலாக கோரத்தாண்டவமாடியது. மேமாத்தூர், கீழ்மாத்தூர், ஒட்டங்காடு,  கொட்டாரம், ஆனைமட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள ராமர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி தாக்கியதில்  மேற்கண்ட கிராமங்களில் சுமார் 1000 மரங்கள் சாய்ந்தன. மேமாத்தூரில் இருந்து கீழ்மாத்தூர் செல்லும் வழியில் காவிரி கரையில் நடப்பட்டிருந்த 600க்கும் மேற்பட்ட தேக்குமரங்கள் காற்றில் சாய்ந்தன.

 இவை காவிரி கரையில் இருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில்  சாலைகளின் ஓரத்தில் இருந்த ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேமாத்தூரில் இருந்து கீழ்மாத்தூர் வழியாக திருக்கடையூர் செல்லும் சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. சூறாவளி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமலும், மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும்  50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்  தரையோடு தரையாக சாய்ந்தன. சுமார் 350 மின்கம்பங்கள் சாய்ந்து  ஒயர்கள் அனைத்தும் தரையில் விழுந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. இதில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. காற்றின் கோரத்தாண்டவத்தை அறிந்த மின்வாரியத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இதனால் கடந்த 17ம் தேதி வரை இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கிளல் மின்சாரம் தடைபட்டது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதரன் தலைமையில்  செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர்  ரவிச்சந்திரன், விஸ்வநாதன், இளநிலை பொறியாளர் அருட்செல்வன் ஆகியோர் 160 மின்வாரிய ஊழியர்கள், டெக்னீசியன்களுடன்  வந்து இந்த பகுதியில் முகாமிட்டு  சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று வரை இந்த பகுதியில் ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.  இதனால் இந்த பகுதி மக்கள்  கீழமாத்தூர் மெயின் ரோட்டுக்கு நடந்து வந்து  அங்கிருந்து பஸ்சில் வெளியூர் சென்று வருகின்றனர். கீழ்மாத்தூர், ஒட்டங்காடு, கொட்டாரம், ஆனைமட்டம் ஆகிய 4 கிராமங்களில் இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

அங்கு சாய்ந்து நிற்கும் மின் கம்பங்களை பிடுங்கி ஒயர்களை அகற்றி புதிய கம்பங்கள் நடவேண்டும் என்றால் காலதாமதம் ஆகும் என்பதால்  அதை அப்படியே விட்டு விட்டு புதிதாக கம்பங்கள் நட்டு ஒயர்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது. மின்சாரம் இல்லாததால் பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் நேற்று கீழ்மாத்தூர் கிராமத்திற்கு  ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்பட்டது. ஆனால் 4 கிராமங்களிலும்  1000 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்கள் கடந்த 4 தினங்களாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி உள்ளனர். செல்போன் சார்ஜ் செய்யக்கூட  மின்சாரம் இல்லாததால் வெளியுலக தொடர்பும் இன்றி தவிக்கும் இவர்கள் காலை, மாலை வேளைகளில் நாளிதழ்களை வாங்கி வந்து பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கின்றனர்.

இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இப்பகுதியில் பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள் தான் வசிக்கிறோம். 4 தினங்களாக வேலைக்கு செல்ல முடியவில்லை. வீடுகளும் சேதமடைந்து உள்ளது. இதனை இயற்கை பேரிடராக கருதி அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sembanarko, Electricity, Electricity, People
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...