×

நிலக்கரி கையிருப்பு குறைந்தது: தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்ததால் 2 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 15 நாட்களாக மின்வெட்டு நிலவி வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்ட நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட அனல்மின்நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளது. நிலக்கரியை உரிய நேரத்தில் வாங்கி இருப்பு வைக்க தவறியதால் அனல்மின்நிலையங்களை நிறுத்தி வைக்கும் நிலை உருவாகியுள்ளது. கடுமையான நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்று நேற்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து பேசினார். இந்நிலையில் தமிழகத்தில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இருப்பு அனைத்து அனல்மின்நிலையங்களிலும் குறைந்து வருகிறது.

தமிழகத்தின் முக்கிய மின் உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த 5 யூனிட்டுகளும் ஆயுட்காலத்தையும் தாண்டி இயங்கி வருகின்றன. அடிக்கடி பழுதாகி வருவதால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.இங்கு 2வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 1வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பு, ஓரிரு நாட்களுக்குக் கூட இல்லாத சூழ்நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து மற்ற யூனிட்களும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தில் 2 அலகுகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடந்து வந்தது. இதில் தமிழகத்தின் பங்கிற்கு 2 அலகுகளில் இருந்தும் 1124 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. இதில் ஒரு அலகில் மட்டுமே தற்போது மின் உற்பத்தி நடந்து வருகிறது. அதிலும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பங்கிற்கு குறைந்த அளவு மின்சாரமே கிடைத்து வருகிறது.ஏற்கனவே கூடங்குளத்தின் மற்றொரு அலகில் பல்வேறு சோதனைகள் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி கிடைக்காத நிலையில் தமிழகத்தின் மின் உற்பத்தி கேந்திரமான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் கிடைக்கும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொதுவாக கோடை காலங்களில் மின்நுகர்வு அதிகமாக இருக்கும். அப்போது மின்தேவை அதிகரிப்பு காரணமாக பற்றாக்குறை ஏற்படும். ஆனால் தற்போது தமிழக அரசு நிலக்கரி கையிருப்பை கையாள தவறியதால் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகமே இருளில் மூழ்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coal stock, power, Tamil Nadu
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்