லீக் சுற்றுடன் வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது...கேப்டன் மேத்யூஸ் விரக்தி

துபாய்: ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்து தொடரில் இருந்தே வெளியேற்றப்பட்டது மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என்று இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இலங்கை அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் 137 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது லீக் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இலங்கை தக்கவைக்க முடியும் என்ற கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 249 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரகமத் ஷா அதிகபட்சமாக 72 ரன் விளாசினார். இலங்கை பந்துவீச்சில் திசாரா பெரேரா 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து 50 ஓவரில் 250 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 41.2 ஓவரில் 158 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

உபுல் தரங்கா அதிகபட்சமாக 36 ரன் எடுத்தார். திசாரா பெரேரா 28, தனஞ்ஜெயா டிசில்வா 23, கேப்டன் மேத்யூஸ் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீபுர் ரகுமான், குல்பாதின், முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

91 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த இலங்கை அணி ஆசிய கோப்பையில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

ஐந்து முறை சாம்பியனான இலங்கை அணியின் இந்த படுதோல்வி குறித்து கேப்டன் மேத்யூஸ் கூறியதாவது: ஒட்டுமொத்த அணியின் மோசமான செயல்பாடு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதல் போட்டியிலும் கூட நாங்கள் மிகக் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தோம். ஆப்கானிஸ்தான் அணிக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா வகையில் அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள். நல்ல தொடக்கம் கிடைத்தும், மிடில் ஓவர்களில் சரியான பார்ட்னர்ஷிப் அமையாதது தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது. பந்துவீச்சாளர்கள் நன்கு பங்களித்தனர்.

கடந்த போட்டியை விட பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனால், பேட்டிங் தான் எங்களுக்கு கை கொடுக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த தொடரிலும் கூட கடைசி கட்ட போட்டிகளில் நன்றாக செயல்பட்டோம். ஆசிய கோப்பையில் எங்களின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக, லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை. நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்துவிட்டோம். தொடர்ச்சியாக இரண்டு போட்டியிலும் குறைந்த ஸ்கோரில் சுருண்டது அதிர்ச்சியும்  ஏமாற்றமும் அளிக்கிறது.

இவ்வாறு மேத்யூஸ் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: