கேரளா வியாபாரிகள் வரத்தால் அச்சுவெல்லம் விலை உயர்வு

ஈரோடு:  மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பியதால், ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சுவெல்லம் 30 கிலோ மூட்டை ₹1,250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு ₹3 உயர்ந்தது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஓரளவுக்கு மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். விவசாயிகள் அறுவடை செய்த கரும்புகளை ஆலை உரிமையாளர்கள் டன் கணக்கில் கொள்முதல் செய்து சென்றனர். இதில் ஈரோடு, முள்ளாம்பரப்பு, கோபி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள வெல்ல உற்பத்தியாளர்கள் கரும்பு பாவில் இருந்து அச்சு மற்றும் குண்டு வெல்லங்களை உற்பத்தி செய்து 30 கிலோ மூட்டைகளாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

 இதில் ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மண்டிக்கு வரத்தாகும் அச்சுவெல்லத்தில் 90சதவீதம் கேரளா மாநில வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அந்த மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியது. இதனால் கேரளா வியாபாரிகள் வெல்ல மண்டிக்கு வருவது முற்றிலும் குறைந்தது. இதில் பல ஆயிரக்கணக்கில் அச்சு வெல்ல மூட்டைகள் தேங்கியது. இதனால் அச்சு வெல்லத்தின் விலையும் சரிந்தது.இந்நிலையில் கேரளா மாநிலம் படிப்படியாக மீண்டு இயல்பு நிலை திரும்ப துவங்கியது. இதனால் மீண்டும் பழையபடி கேரளா வியாபாரிகள் அச்சுவெல்லத்தை வாங்க ஈரோடு வர துவங்கினர். இதன் காரணமாக அச்சு வெல்லத்தின் விலையும் அதிகரிக்க துவங்கியது. இதுகுறித்து சித்தோடு வெல்ல மண்டி நிர்வாகிகள் கூறியதாவது: கேரளா வெள்ள பாதிப்புக்கு பிறகு, தற்போது தான் கேரளா வியாபாரிகள் அச்சு வெல்லம் வாங்க வர துவங்கியுள்ளனர். இதனால் கடந்த வாரம் ₹900க்கு விற்பனையான 30 கிலோ அச்சு வெல்லம் மூட்டை, தற்போது கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. அச்சு வெல்லம் மூட்டை ₹1,250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: