பொதுமக்களை கவராத அணைக்கட்டு பூங்காக்கள்: கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறதா அரசு நிதி?

*மாம்பழத்துறையாறு அணையில் புதர் மண்டியது

*முக்கடலில் புதிதாக அமைக்கப்படுகிறது

நாகர்கோவில்: அணைக்கட்டு பூங்காக்கள் பொதுமக்களை கவராத நிலையில் மீண்டும் மீண்டும் அணைக்கட்டுகளை தேடி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பூங்கா திட்டங்களை செயல்படுத்துவது ஏன் என்று  பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, பொய்கை மற்றும் முக்கடல் அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் மாம்பழத்துறையாறு அணைக்கட்டுகள் சுற்றுலா பயணிகளை கவருகிறது. இவற்றில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்கின்ற  சுற்றுலா பயணிகளை கவர அணைகளின் அடிவார பகுதிகளில் பூங்காக்கள் அமைப்பதை பொதுப்பணித்துறை வழக்கமாக கொண்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகின்ற இந்த பூங்காக்களை பின்னர் பராமரிப்பதும் இல்லை, யாரும் கண்டுகொள்வதும் இல்லை, இவற்றை சுற்றுலா பயணிகளும் பயன்படுத்துவது  இல்லை. ஒரு முறை அமைக்கப்பட்ட பூங்காக்கள் அப்படியே புதர்மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும் அழிந்துவிடுகின்றன. மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கட்டு,  சிற்றார் அணைக்கட்டு, மாம்பழத்துறையாறு அணை பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு அவை சேதமடைந்து எந்தவித பயன்பாட்டிலும் இல்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக  இரும்பு கம்பிகளாக மாறியுள்ளன.

இதில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணைக்கட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் புதியதாக  இருப்பினும் அவை புதர்களுக்கு நடுவே மாறியுள்ளது. இவற்றை இங்கு செல்கின்ற சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதும் இல்லை, பயன்படுத்துகின்ற சூழலும் அங்கு இல்லை. இவ்வாறு  அணைக்கட்டுகளின் அருகே அமைக்கப்படுகின்ற பூங்காக்கள் பொதுமக்களையோ, சுற்றுலா பயணிகளையோ கவருவது இல்லை. அடிக்கடி மக்கள் அதிகம் பயணப்படுகின்ற  பகுதியிலேயே இந்த நிலைதான் உள்ளது.

இவை ஒருபுறம் இருக்க நாகர்கோவில் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள முக்கடல் அணையில் ரூ.1 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் இருந்து  சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள முக்கடல் அணை நகரின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. வேம்பாறு குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் ஒரு பகுதியில் கூட பசுமையை  காண முடியாது. இப்போதே இந்த பகுதியில் புற்கள் அனைத்தும் கருகிய நிலையில் காணப்படுகிறது. முக்கடல் அணையில் சுமார் 7 ஏக்கர் இடம் உள்ளது. மலையடிவாரத்தில் நல்ல  நிழலுடன், சுகாதாரமான காற்றும் கிடைக்கிறது. குடிநீருக்கான பகுதி என்பதால் இது சுத்தமான சுகாதாரமான பகுதியாக விளங்கி வருகிறது.

இந்த பகுதியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த பூங்கா மிக பிரமாண்டாக காட்சியளிக்கிறது. சிறுவர்களை குஷிபடுத்தும் வகையில் சறுக்குகள், ஊஞ்சல் உள்பட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பெரியவர்கள் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நீரூற்றுகள் போன்றவை ஏதும் இங்கு அமைக்கப்படவில்லை. இந்த பூங்காவுக்கான பணிகள் முடிந்து தற்போது ஓராண்டும் கடந்துவிட்டது. இருப்பினும் பூங்காவை அதிகாரிகள் திறக்க முன்வரவில்லை.

இதற்கிடையே மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் இன்னொரு பூங்கா அமைக்க இங்கு திட்டமிடப்பட்டது. இதற்காக அம்ருத் திட்டத்தில் மத்திய அரசு ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான  பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 மாதத்தில் பணிகள் அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு 2 பூங்காக்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்று  அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே கூறி வருகின்றனர். ஆனால் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெறுகின்ற இந்த பணிகள் இதுவரை நிறைவுபெறவும் இல்லை, பூங்காவும்  திறக்கப்படவில்லை.

ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பூங்காக்களை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலையில், பெரிய அளவில் பயன்படுத்தாத நிலையில் இதுபோன்று உரிய திட்டமிடல்கள்  இல்லாமல் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை அதிகாரிகள் முன்னெடுத்து செல்வது ஏன்? என்று பொதுமக்கள்  கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். அரசு நிதி பூங்கா திட்டங்கள் வாயிலாக வீணடிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: