திருச்சியில் ஹெச்.ராஜாவை கண்டித்து இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற பாஜகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசிய ஹெச்.ராஜா அறநிலையத்துறை பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரைக் கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு அறநிலையத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திரண்டனர்.

அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மிலிட்டரி நடராஜன் என்பவர் போராட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றியதையடுத்து கைக்கலப்பு ஏற்பட்டு அறநிலையத்துறை பணியாளர்கள் நடராஜனைத் தாக்கினர். நடராஜனை மீட்ட போலீசார் அங்கிருந்த புறக்காவல் மையத்துக்குள் அவரை அடைத்து வைத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதன் பிறகும் அவரை அறநிலையத்துறை பணியாளர்கள் தாக்க முற்பட்டதால் அவரை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.

இதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட கோவில்களைச் சேர்ந்த அறநிலையத்துறை பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஹெச்.ராஜாவைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறநிலையத்துறை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: