அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், அனுபவத்திற்கு ஏற்ப பணி உயர்வு வழங்க வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் அறிவித்தனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழகத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக தமிழகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பல்வேறு மருத்துவ சங்கங்களை ஒருங்கிணைத்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து அடுத்தக் கட்டமாக வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று மருத்துவர்கள் சங்கத்தினர் கூறினர். இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர், இயக்குநர்கள் தலைமையில் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில பயிற்சி பெறலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நடைமுறையில் உள்ளதால், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது சாத்தியம் இல்லை என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் 21ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டம் நடைபெற்றாலும் அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: