ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பகுதிகளில் மத்திய தொல்லியல் துறையினர் மீண்டும் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், தாமிரபரணி நதிக்கரையோரம் சிவகளை பகுதியில் ஏராளமான மண் தாழிகள் புதைந்து கிடந்தன. பழங்காலத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளமாக ஏராளமான மண்தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களில் முதுமக்கள் மண் தாழிகள் வெளியில் தென்படுகிறது. ஆங்காங்கே புதைந்து கிடக்கும் மண் தாழிகளில் எலும்புகளும், அதன் அருகில் குதிரையின் லாடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அப்பகுதிகளில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்று மத்திய தொல்லியல் துறையை சேர்ந்த டாக்டர் யத்தீஷ்குமார், பிரசன்னா ஆகியோர் சிவகளை, செக்கடி, சுந்தரலிங்கபுரம், மரக்களமேடு மற்றும் தொன்மையான ஸ்ரீமூலக்கரை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். இறுதியாக ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால ஆயதங்களையும் பார்வையிட்டனர். முன்னதாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியிலும் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: