உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை சரிவு

பட்டுக்கோட்டை: தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிந்து வருகிறது. ஒரு தேங்காய் ₹10 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு தற்போது தென்னை சாகுபடி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3.1 லட்சம் ஹெக்டேரில் (7.75  லட்சம் ஏக்கர்) தென்னை சாகுபடி நடக்கிறது. அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 37,000 ஹெக்டேரில் (92,500 ஏக்கர்) தென்னை சாகுபடி  நடக்கிறது.கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழகத்தில் உள்ள நாகர்கோவில், தேனி, கம்பம், திருநெல்வேலி, ஆலங்குளம், தாராபுரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது.

தற்போது கோவை, பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 200 லோடு (ஒரு லோடு என்பது 30,000  தேங்காய்) தேங்காய் தேவைப்படுகிறது. இவையனைத்தும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் பகுதிகளிலிருந்து தான் சென்றுள்ளது. ஆனால் கடந்த 6  மாதங்களாகவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தேங்காய் உற்பத்தி அதிகமாகி அங்கிருந்தும் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 150 லோடு வருகிறது. ஆந்திரா, கர்நாடகவில் ஒரு லோடு தேங்காய்க்கு ₹2,000 குறைவாகவே  உள்ளது.

 அதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் பகுதிகளிலிருந்து தினசரி 200 லோடு சென்று கொண்டிருந்த தேங்காய் தற்போது 50 லோடுகளில் தான் செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில்  தேங்காய் விலை குறைந்து வருகிறது. தற்போது 500 கிராமுக்கு மேல் உள்ள ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ₹13 முதல் ரூ 14க்கும், சில்லறை விற்பனையில் ₹16 முதல் ₹18க்கும் விற்கப்படுகிறது. 500 கிராமுக்கு கீழ்  உள்ள ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ₹10 முதல் ₹11க்கும், சில்லறை விற்பனையில் ₹13 முதல் ₹15க்கும் விற்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: