சென்னையில் டீசல் 78 12 நகரங்களில் பெட்ரோல் 90ஐ தாண்டியது

* அசராமல் உயர்த்தும் நிறுவனங்கள்

* அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நேற்றும் புதிய உச்சத்துக்கு சென்றது. சென்னையில் நேற்று பெட்ரோல் ₹85.31, டீசல் ₹78க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஒன்றரை மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றும் விலை உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 16காசு உயர்ந்து ₹85.31ஆக இருந்தது. டீசல் 6 காசு உயர்ந்து  சென்னையில் முதல் முறையாக ₹78ஐ தொட்டது. இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து மட்டும் சென்னையில் பெட்ரோல் ₹3.73, டீசல் ₹3.82 உயர்ந்துள்ளது. ஒன்றரை மாதத்தில் பெட்ரோல் ₹6.05 டீசல் ₹6.38  எகிறியுள்ளது.

பெட்ரோல் டெல்லியில் ₹82.06, மும்பையில் ₹89.44க்கு விற்பனையானது. டீசல் டெல்லியில் ₹73.78க்கும், மும்பையில் ₹78.33க்கும் விற்கப்பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பர்மானியில் கடந்த வாரமே பெட்ரோல் ₹90ஐ  எட்டி விட்டது. மும்பை நகரத்தில் ₹90ஐ நெருங்கி விட்டது.  வரிகள் அதிகம் என்பதால் மகாராஷ்டிரா மாநிலத்தின் 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி விட்டது. பர்பனி, நந்துர்பார், நாண்டெட், லாத்தூர்,  ஜால்னா, ஜல்காவ், ஹிங்கோலி, கோண்டியா புல்தானா, பீட், அவுரங்காபாத், ரத்னாகிரி ஆகிய 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டியது. இதில் நாண்டெட் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகமாக பெட்ரோல்  ₹92.19 ஆகவும், டீசல் ₹82.89 ஆகவும் இருந்தது. நாட்டிலேயே இதுதான் அதிகப்பட்ச விலையாகும். இதே மாவட்டத்தின் உம்ரி தாலுகாவில் பெட்ரோல் விலை ₹91.89 ஆகவும், டீசல் விலை ₹79.49 ஆகவும் இருந்தது.   புனேயில் பெட்ரோல் ₹89.31 ஆகவும் டீசல் விலை ₹77 ஆகவும் உள்ளது.

கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்ேத பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் மிக அதிகமான கலால் வரி ஆகியவையே விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணங்கள் என நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். பணவீக்கமும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி டெல்லியில் பெட்ரோல் ₹69.97ஆகவும், சென்னையில் ₹72.53ஆகவும் இருந்தது. இதுபோல் டீசல் கடந்த ஜனவரி 1ம் தேதி டெல்லியில் ₹59.70 ஆகவும், சென்னையில் ₹62.90 ஆகவும்  இருந்தது. இதே நிலை தொடர்ந்தால் பொது மக்கள் பலர் பொது போக்குவரத்து மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதோடு, பெட்ரோல் விலை உயர்வு வாகன விற்பனையிலும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என  ஆட்டோமொபைல் டீலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள், டாக்சி கட்டணம் போன்றவை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலைகுறைந்தும் பலனில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க பிரதான காரணமாக கூறப்பட்டது. ஆனால், நேற்று ஆசிய சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்து  காணப்பட்டது. பிரண்ட் கச்சா எண்ணெய் பங்குகள் 0.2 சதவீதம் சரிந்து 77.93 டாலருக்கு வர்த்தகம் ஆகின. கச்சா எண்ணெய் விலை அதிகமாக குறைந்தாலும் இந்தியாவுக்கு பயன் இருக்காது. ஏனெனில் ரூபாய் மதிப்பு சரிவு இந்த  பலன்களை கெடுத்து விடுகிறது. அதோடு, சர்வதேச சந்தை நிலவரங்கள் உடனடியாக பலன் அளிப்பதில்லை. இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை சர்வதேச நிலவரத்துடன் சற்று வேறுபட்டே உள்ளது என்று சந்தை  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த நாலு பேருக்கு நன்றி...

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அவற்றின் மீதான வரிகளை மத்திய அரசு சிறிதளவு கூட குறைக்க முன்வரவில்லை. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ₹13,000 கோடி இழப்பு ஏற்படும் என மத்திய அரசு தரப்பில்  கூறப்படுகிறது. மாநிலங்களும் தங்கள் வருவாய் போய்விடும் என வரியை குறைக்கவும், ஜிஎஸ்டியில் சேர்க்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தலா ₹2.50 குறைத்தது. ஆந்திரா தலா 2 ரூபாய், மேற்கு வங்கள் தலா ஒரு ரூபாய் என வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் உயர்வை  தற்காலிகமாக தடுத்து வைத்துள்ளன. நான்காவதாக கர்நாடகா அரசு நேற்று பெட்ரோல், டீசல் கலால் வரியை தலா ₹2 வீதம் குறைத்துள்ளது. இதுபோல் பிற மாநிலங்களும் முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், வாகன  ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: