தண்ணீர் இறைக்கும்போது சிமென்ட் சிலாப் உடைந்து விபரீதம் கிணற்றுக்குள் விழுந்து 3 பெண்கள் பலி

* 5 பேருக்கு தீவிர சிகிச்சை

* கிராமமே சோகத்தில் மூழ்கியது

சென்னை: செய்யூர் அருகே ஊராட்சி கிணற்றின் சிலாப் மீது நின்று தண்ணீர் எடுக்க 8 பேர் முயன்றனர். எதிர்பாராதவிதமாக சிலாப் உடைந்து 8 பேரும் கிணற்றில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சி மாவட்டம் செய்யூர் வட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ளது சூரியபிள்ளையார் குப்பம். இப்பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.  இதன் காரணமாக ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மின்சாரம் வராததால் குடிநீருக்காக அப்பகுதியை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட மொத்தம் 8 பேர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சூரிய பிள்ளையார் குப்பத்தின் ஊராட்சி கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றனர்.

கிணற்றின்மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடப்பட்டு இருந்தது. இதனால் 8 பேரும் கிணற்று சிலாப்பின் மீது ஏறி நின்று தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். சிலாப் ரொம்பவும் சேதமடைந்து இருந்ததால், அவர்களின் வெயிட்டை தாங்காத சிலாப் திடீரென உடைந்து கிணற்றில் விழுந்தது. அதன் மேல் நின்று இருந்த 8 பேரும் கிணற்றில் விழுந்தனர். அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.அவர்கள் உடனடியாக செய்யூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஊரில் இருந்த பொதுமக்களே கயிறு உள்பட பல்வேறு உபகரணங்கள் மூலம் கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

 

இதில் கிணற்றில் விழுந்த மல்லிகா (35), சிவகாமி (40), அம்சா (30), நீலாவதி (37), நாகப்பன் (40) ஆகிய 5 பேரையும் பல மணிநேரம் போராடி பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்.  பலத்த காயம் அடைந்த 5 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய சசிகலா (30), மங்கை (50), கமலா (30) ஆகிய 3 பேரை இறந்த நிலையில் மீட்டனர்.  அவர்களது சடலத்ைத பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் கோட்டாட்சியர் மாலதி மற்றும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட கிணற்றினை பார்வையிட்டனர். மேலும் இறந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது. செய்யூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: