போலீஸ் ஸ்டேசனில் இருந்து கைதி கைவிலங்குடன் ஓட்டம்

சென்னை: பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு செல்போன் வழிப்பறி தொடர்பாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், கைவிலங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாண்டிபஜார் போலீசார் ஜிஎன் செட்டி சாலையில் ேநற்று முன்தினம் தீவிர வாகன சோதையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், நுங்கம்பாக்கம் காமராஜர் நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என்றும், இவர் மீது தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் காவல் நிலையங்களில் செல்போன் மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டனை கைவிலங்கு போட்ட நிலையில் காவல் நிலையத்தில் அமரவைத்திருந்தனர். அங்கு உதவி ஆய்வாளர் ஞானசேகரன் பாதுகாப்பில் மணிகண்டன் இருந்தார். போலீசார் மணிகண்டனுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். உணவை சாப்பிட்ட மணிகண்டன் கை கழுவி விட்டு வருவதாக கூறிவிட்டு, காவல் நிலையம் வெளியே சென்றுள்ளார். அங்கிருந்து திடீரென கைவிலங்குடன் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து, உதவி ஆய்வாளர் ஞானசேகரனிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் ஒன்று கோயம்பேடு புறப்பட்டது. நேற்று அதிகாலை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பஸ் சென்றபோது, சாலை நடுவில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் தூண் மீது எதிர்பாராதவிதமாக உரசியது. இதில், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து, பஸ் டிரைவர் பாண்டியன் (30) மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கனிமொழி (30) அவரது மகன் (5) ஆகிய 3 பேர் கோயமடைந்தனர்.

 ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 9வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வரும் ராமன் (66), இவரது வீட்டுக்கு அருகே பக்கத்து பிளாட்டில் வசிப்பவர் கணேஷ் (36), பார்த்தசாரதி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் பூபதி (67), ஆதம்பாக்கம், குமரகுருபரன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சரவணன் (36), இவரது பக்கத்து பிளாட்டில் குடியிருப்பவர் ராம்பிரபு (33) ஆகிய பேரின் வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் 6 சவரன் நகை, 4000 ரொக்கம், ஒரு லேப்டாப், ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் (40). திருமுடிவாக்கம் பகுதியில் இரும்பு குடோன் வைத்துள்ளார். தொழிற்சாலைகளில் வீணாகும் வயர்களை மொத்தமாக வாங்கி வந்து, அதில் உள்ள காப்பரை மட்டும் பிரித்தெடுத்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை அப்துல் வழக்கம்போல் குடோனை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 5 டன் காப்பர் வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது.

 விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அன்னை நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (30). மேடவாக்கத்தில் தங்கி, குடிநீர் சப்ளை லாரி ஓட்டி வருகிறார். இவர், நேற்று அதிகாலை அடையாறு எல்பி சாலையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி ஒரு மின்கம்பம், சிக்னல் கம்பம் மற்றும் சென்டர் மீடியனில் மோதி நின்றது. இதில் மின்கம்பம், சிக்னல் கம்பம் சேதமடைந்தன. டிரைவர் ஏழுமலைக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சக்தி விக்னேஷ் (22). இவர், மேடவாக்கம் அருகே திருவஞ்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று நண்பர்களுடன் கோவளம் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: