குட்கா முறைகேடு வழக்கில் 7 நாட்கள் சிபிஐ விசாரணைக்கு பின்பு மாதவராவ், சீனிவாசராவ் சிறையில் அடைப்பு:

* லஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியது

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் மாதவராவ், சீனிவாசராவ் 7 நாள் சிபிஐ விசாரணைக்கு பின்பு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் லஞ்சம் பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. குட்கா போதைப்பொருளை விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளுக்கு ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து, இந்த புகாரில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளின் பெயர்கள் அடிப்படுவதால், சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த 5ம் தேதி டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.  இதனைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் குட்கா விற்பனை செய்யவும், தயாரிக்கவும் ஒத்துழைத்த மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கடந்த 6ம் தேதி அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்று அறிந்து கொள்ள, சிபிஐ அதிகாரிகள் சிறையில் உள்ள 5 பேரையும் 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதில் குட்கா தடையின்றி விற்பனை செய்ய காவல் துறையின் கீழ் மட்டத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வரை பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் 5 பேரையும் காவல் முடிந்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ மாதவராவ், சீனிவாச ராவ் ஆகிய இரண்டு பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதி மற்ற 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, மாதவராவ், சீனிவாசராவ் தொடர்பான மனு மீது விசாரணை நடத்தினார்.

அதில் இருவரையும் மீண்டும் 3 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். அதன்படி சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் பணம் கொடுத்தது இருவரும் தான் என்பதாலும், இவர்களுக்கு தான் எல்லோரையும் தெரியும் என்பதாலும்,  தனித்தனியாக வைத்து யார்யாருக்கு பணம் கொடுத்தீர்கள், உங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தது யார் என்பதையெல்லாம் குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், காவல்துறை முக்கிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது தொடர்பான ஆவணங்களும் போலீசாரிடம் சிக்கியதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 3நாள் காவல்  முடிந்து, 2 பேரையும் சிபிஐ நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி இருவரையும் வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் அன்று விசரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: