140வது பிறந்த நாள் விழாவின்போது பெரியார் சிலையை அவமதித்த வக்கீல் கைது: திருமாவளவன் தலைமையில் மறியலால் பரபரப்பு

சென்னை : அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த போது, உயர் நீதிமன்ற வக்கீல் ஒருவர் பெரியார் சிலையை அவமதித்ததால் கைது செய்யப்பட்டார்.   திராவிடர் கழக நிறுவனர் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு நேற்று அதிகாலை முதல் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் ஒருவர் தலைக்கவசம் அணிந்து கொண்டு பெரியார் சிலை அருகே வந்தார்.

அங்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் ெபரியார் சிலை மீது தனது காலில் அணிந்து இருந்த ஷூவை கழற்றி வீசனார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்கள், அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அந்த நபர் பெரியார் கொள்கைகளுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு இருந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பொதுமக்களிடம் இருந்து பத்திரமாக மீட்டு வாகனத்தில் ஏற்றினர். அப்போதும் ஆத்திரம் தீராத பொதுமக்கள் காவல்துறை வாகனத்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பின்னர் கடும் போராட்டத்திற்கு இடையே ஷூ வீசிய நபரை சிந்தாதிரிப் ேபட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஜெகதீசன் (30) என்றும், பாஜகவை சேர்ந்த இவர், தற்போது கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து வக்கீல் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். பெரியார் பிறந்தநாள் அன்று அவரது சிலை அவமதிக்கப்பட்ட தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பெரியார் சிலையை அவமதித்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், அதுவரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவனிடம் ஷூ வீசிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைதொடர்ந்து திருமாவளவன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

பிறந்த நாள் அன்று பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: