பாசனத்திற்கு திறந்த தண்ணீர் வெள்ளமாக செல்வதால் மதுரை வைகையாற்றில் மூழ்கி 5 மாணவர் உட்பட 6 பேர் பலி

மதுரை:  பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். வைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம் உட்பட 5 மாவட்ட பாசனம், குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மதுரை வைகையாற்றின் இருகரைகளையம் தொட்டு தண்ணீர் வெள்ளமாக செல்கிறது.  தண்ணீரை கண்ட உற்சாகத்தில் ஆபத்தை அறியாமல் பலர் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். இப்படி குளித்த 5 மாணவர்கள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.  மதுரை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த செல்வம் மகன் சதீஷ் (எ) சதீஷ்பாண்டி (15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று முன்தினம் சக மாணவர்களுடன் பரவை பகுதியில் உள்ள  வைகையாற்றுக்கு குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு சதீஸ்பாண்டி ஆற்றில் மூழ்கினார்.

தகவலறிந்து வந்த சோழவந்தான், மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் மற்றும் கமாண்டோ படையினர் என 25க்கும் மேற்பட்டோர்  தீவிரமாக தேடி, முட்புதரில் சிக்கியிருந்த சதீஸ்பாண்டியின் உடலை மீட்டனர். மேலும்  சமயநல்லூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் 55 வயது நபர் நீரில் மூழ்கி இறந்தார். இதே போல் நேற்று முன்தினம் மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகரை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் (12), நண்பர்களுடன் வைகை யில் குளிக்கச்சென்று தண்ணீரில் மூழ்கி பலியானார்.

மதுரை செல்லூைரச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் பாண்டியராஜன் (17). பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று காலை அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள வைகையில் குளித்தபோது நீரில் மூழ்கினார். இதேபகுதியில் நேற்று  பகலில் 2 மாணவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். இவர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டு பலியானதாக கூறப்படுகிறது. இவர்களையும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவர்கள்  யார் என்ற  பெயர் விபரம் தெரியவில்லை. .

3 ஆண்டுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு

கடந்த 2015ல் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியபோது, வைகை அணையில் கூடுதல் நீர் திறக்கப்பட்டது.அதன்பிறகு கடந்த 2016, 2017ல் போதிய மழையில்லாததால் வைகை அணையில் குறைவாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் பெரியாறு அணை 142 அடியை எட்டியதால் நீர் திறக்கப்பட்டு, வைகை அணையும்  அதிகபட்சமாக 69 அடி வரை எட்டியது. தற்போதைய நிலவரப்படி வைகை அணையில் விநாடிக்கு 3,960 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மதுரை வைகையாற்றில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து  ஓடுகிறது. 3 ஆண்டுக்கு பிறகு வைகையில் தண்ணீரை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இதுவே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: