பேட்டிங்கில் ஹாங்காங் திணறல் பாகிஸ்தானுக்கு 117 ரன் இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், ஹாங்காங் அணியுடனான ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு 117 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட் செய்தது. நிசாகத் கான், கேப்டன் அன்ஷுமன் ராத் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். நிசாகத் 13 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ராத் 19 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த கிறிஸ்டோபர் கார்ட்டர் 2, பாபர் ஹயாத் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். எசான் கான் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, ஹாங்காங் அணி 16.3 ஓவரில் 44 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த கிஞ்சித் ஷா - அய்சாஸ் கான் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது.

அய்சாஸ் 27 ரன், ஸ்காட் ஸ்டீபன் (0), தன்வீர் அப்சல் (0) ஆகியோர் உஸ்மான் கான் வீசிய 31வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஹாங்காங் மீண்டும் சரிவை சந்தித்தது. கிஞ்சித் ஷா 26, எசான் நவாஸ் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஹாங்காங் அணி 37.1 ஓவரிலேயே 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நதீம் அகமது 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் உஸ்மான் கான் 3, ஹசன் அலி, ஷதாப் கான் தலா 2, பாகீம் அஷ்ரப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: