3வது போட்டியில் மித்தாலி ராஜ் சதம் வீண் ஜெயாங்கனி அதிரடியில் இலங்கை வெற்றி: 2-1 என தொடரை வென்றது இந்தியா

கதுநாயகே: இந்திய மகளிர் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இலங்கையின் கதுநாயகே விளையாட்டு வளாக ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா - கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்தது. மந்தனா 51 ரன் (62 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மான்பிரீத் 17, ஹேமலதா 6, தீப்தி ஷர்மா 38 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அபாரமாக விளையாடிய மித்தாலி ராஜ் 125 ரன் (143 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), ஜுலன் கோஸ்வாமி 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனைகள் ஹாசினி பெரேரா 45, கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஜெயாங்கனி 115 ரன் (133 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த தொடரில், இந்திய அணி 4 புள்ளிகளும், இலங்கை அணி 2 புள்ளிகளும் பெற்றன. இந்தியா இதுவரை 9 போட்டியில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து (12), ஆஸ்திரேலியா (10), இங்கிலாந்து (10), பாகிஸ்தான் (8) முதல் 4 இடங்களில் உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் (6), தென் ஆப்ரிக்கா (4), இலங்கை (2) அணிகள் பின்தங்கியுள்ளன. அடுத்து இந்தியா - இலங்கை அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி கதுநாயகேவில் 19ம் தேதி நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: