முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி ஐஓசி அணிக்கு சாம்பியன் பட்டம்: ரயில்வே 2வது இடம்

சென்னை: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் பைனலில் ரயில்வே விளையாட்டு வாரிய அணியை வீழ்த்தி  ஐஓசி அணி சாம்பியன் பட்டம் வென்றது. எம்சிசி- முருகப்பா 92வது அகில இந்திய தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி கடந்த 6ம் தேதி சென்னையில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் & சிந்து வங்கி அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆர்மியை போராடி வென்றது. இதையடுத்து நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரியம் -  ஐஓசி மோதின. தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து செயல்பட்ட ஐஓசி வீரர்கள், ரயில்வே கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். 14வது நிமிடத்தில் ரோஷன் மின்ஸ் அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.

தொடர்ந்து குர்ஜிந்தர் சிங் 18வது நிமிடத்திலும், தல்விந்தர் சிங் 21வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க, ஐஓசி 3-0 என முன்னிலையை அதிகரித்தது. ஐஓசி வீரர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரயில்வே அணியினர் திணறினர். 52வது நிமிடத்தில் பரத் சிகாரா அபாரமாக கோல் அடிக்க ஐஓசி 4-0 என முன்னிலை பெற்றது. ரயில்வே வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஐஓசி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு 92வது எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை வழங்கப்பட்டது. சிறந்த வீரர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் முருகப்பா நிறுவனத்தின் தயாரிப்புகளான அதிநவீன சைக்கிள்களும் பரிசாக வழங்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: