முஷ்பிகுர் 144 ரன், மிதுன் 63 ரன் விளாசல் இலங்கை அணிக்கு 262 ரன் இலக்கு: பந்துவீச்சில் மிரட்டினார் மலிங்கா: முஷ்பிகுர் ரகிம் 144 ரன் 150 பந்து 11 பவுண்டரி 4 சிக்சர்

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் மோதிய வங்கதேசம் 262 ரன் இலக்கை நிர்ணயித்தது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் மோதின. டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். லசித் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் லிட்டன் தாஸ், 6வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேச அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. தமிம் இக்பால் 2 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பியது மேலும் பின்னடைவைக் கொடுத்தது.

இந்த நிலையில் முஷ்பிகுர் ரகிம் - முகமது மிதுன் ஜோடி உறுதியுடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு132 ரன் சேர்த்தனர். மிதுன் 63 ரன் (68 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மலிங்கா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குசால் பெரேராவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த மகமதுல்லா, மொசாடெக் உசேன் தலா 1 ரன் எடுத்து வெளியேறினர். ஒரு முனையில் முஷ்பிகுர் அபாரமாக விளையாட, மெகதி ஹசன் மிராஸ் 15 ரன், கேப்டன் மஷ்ராபி மோர்டசா 11, ருபெல் உசேன் 2, முஸ்டாபிசுர் ரகுமான் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கி கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய முஷ்பிகுர் ரகிம் 144 ரன் (150 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி திசாரா பெரேரா பந்துவீச்சில் மெண்டிஸ் வசம் பிடிபட்டார்.

வங்கதேச அணி 49.3 ஓவரில் 261 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தமிம் 2 ரன்னுடன் (4 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் மலிங்கா 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 23 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். தனஞ்ஜெயா டிசில்வா 2, திசாரா, அபான்சோ, லக்மல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: