அரசு ஊழியர்கள் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு விதிகளை தளர்த்தி பதவி உயர்வு வழங்கும் போது பாரபட்சம் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.  கோவை மாநகராட்சியில் ஃபிட்டராக பணி நியமனம் செய்யப்பட்ட ஞானவேல் என்பவருக்கு பணி விதிகளை தளர்த்தி செயற்பொறியாளராக பதிவு உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, அவருடன் பணியாற்றிய பாபு உள்பட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ஞானவேலை போல் எங்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வுக்கான விதிகளை தளர்த்துவதில்  எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

 இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

  அரசு பணி விதிகளில் சலுகைகளோ, விதி விலக்கோ வழங்குவதாக இருந்தால் தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட நபருக்கு மட்டும் விதிகளை தளர்த்தி பதவி உயர்வு வழங்க கூடாது. இதில் பாரபட்சம் காட்ட கூடாது. இந்த வழக்கை பொறுத்தவரை, ஞானவேலுக்கு மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு தரப்பட வேண்டும். மனுதரார்கள் மட்டும் அல்லாமல் ஞானவேலின் பதவி உயர்வு வழங்கியது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.   

விதிகளில் விலக்கு அளித்து பதவி உயர்வு வழங்கியது குறித்து விரிவான விசாரணை நடத்தி முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.  மேலும், மனுதாரர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அது தொடர்பாக 12 வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: