திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் துவக்கம்: பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளுகின்றனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று மாலை 4 மணி முதல் 4.40 மணிக்குள் மகர லக்னத்தில் மஞ்சள் நிற கொடியில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியார் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.

Advertising
Advertising

முன்னதாக கொடி, தேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி, விஸ்வசேனாதிபதி நான்கு மாட வீதியில் வலம் வருகின்றனர். தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சமர்ப்பிக்க உள்ளார். பின்னர் அவர் ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2019ம் ஆண்டுக்கான தேவஸ்தானம் சார்பில் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர் விற்பனையை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இரவு 8 மணி முதல் 10 மணி வரை முதல் உற்சவமான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா வருகிறார். 2ம் நாளான நாளை காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்னவாகன உற்சவம் நடக்கிறது.

5ம் நாளான 17ம் தேதி காலை மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இரவு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கருட சேவையன்று மலைப்பாதையில் பைக்குகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 9ம் நாளான 21ம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றிரவு 7 மணியில் இருந்து 9 மணிக்குள் பிரமோற்சவ கொடி இறக்கப்படுகிறது.

ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தை காண நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இதனால், திருப்பதிக்கு செல்லும் பஸ், ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் திருமலையில் அறைகள் வாடகைக்கு பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மின்விளக்கு அலங்காரங்களால் திருமலை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சர்வ பூபாள வாகனம் சோதனை ஓட்டம்

ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் 450க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிரமோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மகாவிஷ்ணு கலியுகத்தில் சீனிவாசப்பெருமாளாக அவதரித்த போது தனக்கு உற்சவம் நடத்த வேண்டும் என்று விரும்பிய நிலையில் பிரம்மதேவனே முதல் உற்சவத்தை நடத்தியதாகவும் எனவே அதுவே பிரமோற்சவம் எனவும் அழைக்கப்பட்டு வருவதாக ஐதீகம்.

பிரமோற்சவத்தில் பல்வேறு வாகன சேவையில் நான்கு மாடவீதிகளில் சுவாமி வீதி உலா வருவதையொட்டி நேற்று சூரிய பிரபை வாகனம் மற்றும் சர்வ பூபாள வாகனங்களின் சோதனை ஓட்டம் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு முன்னிலையில் உற்சவ மூர்த்திகள் இல்லாமல் நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: