16 வயது சிறுமிக்கு திருமணம் : 5 மணி நேரத்தில் செல்லாது என அறிவிப்பு: தாலியை பிரித்து பெற்றோருடன் அனுப்பிய அதிகாரிகள்

பாரிமுனை: பாரிமுனையில் 16 வயது சிறுமிக்கு நடந்த திருமணத்தை 5 மணி நேரத்தில் செல்லாது என அறிவித்து, தாலி கயிற்றை பிரித்து மணமகன் மற்றும் மணமகளை பெற்றோருடன் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். சென்னை சவுகார்பேட்டை என்எஸ்சி போஸ் ரோட்டை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன் (25). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், அடையாறில் உள்ள உறவினர் மகள் குமுதா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், பாரிமுனை குமரக்கோட்டம் கோயிலில் நேற்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் இரு வீட்டார் முன்னிலையில், திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertising
Advertising

இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் சமூக பாதுகாப்பு அமைப்பினர், யானைக்கவுனி போலீசாருடன், அங்கு சென்றனர். 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது செல்லாது என கூறி, மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை தங்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்று, இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் உள்ளதா அல்லது வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார்களா என விசாரித்தனர். அதற்கு அவர்கள், உறவினர்கள் என்பதால், இரு வீட்டாரின் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது என தெரிவித்தனர். பின்னர், ‘‘16 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இந்த திருமணம் செல்லாது. மீறினால், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறினர்.

பின்னர், தாலி கயிற்றை கழற்றி, சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் அதிகாரிகள், இந்த திருமணம் செல்லாது என கூறி, இரு வீட்டு பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக பெற்று கொண்டனர். இச்சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: