காவலரை தாக்கிய போதை ஆசாமி கைது

சென்னை: குடிபோதையில் காவலரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து போலீஸ் ஞானசேகர் (32) என்பவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் நடந்து வந்த ஒருவர் ஞானசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அந்த நபர் ஞானசேகரை திடீர் என தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஞானசேகர் சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர் பெருங்களத்தூர் சதானந்தபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (51) என்பதும், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இதுபோல அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* கோட்டூரபும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குடிபோதையில் கீழே விழுந்த குமரேசன் (28) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

* அமைந்தகரையில், ஆட்டோவில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்த ஐசிஎப், கக்கன்ஜி நகரை சேர்ந்த பாலு (எ) பங்க் பாலு (36), சேட்டு (எ) மனோகர் (28), டி.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த தங்கம் (61), கருப்பு (எ) ஞானசேகர் (30), கல்லறை தோட்டத்தில் வசிக்கும் ஞானசேகரின் தாய் மஞ்சுளா (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு ஓடி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை ேசர்ந்த விஷ்வஜித் (19) என்பவர் பெரியமேடு என்.எச் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* அம்பத்தூர் தொழிற்பேட்டை சி.டி.எச் சாலை பேருந்து நிலையம் அருகே பைக் மீது  சிமென்ட் கலவை லாரி மோதியதில் பழவந்தாங்கல் வானுவம்பேட்டை சுந்தரமூர்த்தி தெருவை சேர்ந்த மெக்கானிக் அரவிந்த் (20) என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வாணியம்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் வாசு (53) என்பவரை கைது செய்தனர்.

* ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் டீக்கடை நடத்தி வருபவர் முருகேசன் (47) இவர் அதே பகுதியில் உள்ள அரசு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று சொந்த தேவைக்காக 20 ஆயிரம் கடன் பெற முருகேசன் வங்கி மேலாளரை அனுகி உள்ளார். அப்போது, அவரது வங்கி கணக்கை சோதனை செய்த அதிகாரி, வேறொரு வங்கி கிரடிட் கார்டு மூலம் கடனாக 2.5 லட்சம் கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு, முருகேசன் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், மர்ம நபர்கள் முருகேசனின் பெயர், முகவரி, ஆதார் அட்டை ஆகியவற்றை போலியாக தயாரித்து, கிரெடிட் கார்டு, பெற்று வங்கி கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: